

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு - தாண்டிக்குடி செல்லும் மலைச் சாலையில் மயான காளியம்மன் கோயில் சாலை அருகேயுள்ள சோதனைச்சாவடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இதையடுத்து, அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையிலேயே நீண்ட நேரம் காத்திருந்து பின்னா் அங்கிருந்து சென்றனா்.
மேலும், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளிலும், மலைச் சாலைகளிலும் சுற்றித் திரிவதால் அந்தப் பகுதி மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கும், இரவு நேரங்களில் காவலுக்குச் செல்வதற்கும் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், மலைச் சாலைகளில் உலா வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.