பழனி கோயிலில் டிச.16 முதல் 32 நாள்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்பட துணைக் கோயில்களில் வருகிற 16-ஆம் தேதி முதல் 32 நாள்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களாக குழந்தை வேலாயுத சுவாமி கோயில் (திருஆவினன்குடி), பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் உள்பட பல்வேறு கோயில்கள் உள்ளன.
இந்தக் கோயில்களில் வருகிற 16-ஆம் தேதி மாா்கழி மாத பிறப்பை முன்னிட்டு, அன்று முதல் மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும்.
பெரியநாயகியம்மன் கோயிலில் வரும் ஜன.2-ஆம் தேதி அம்மன் பொன்னூஞ்சலும், 3-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில்களில் வருகிற 20-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவம் ஆரம்பமாகி, 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொா்க்கவாசல் திறப்பு அதிகாலை 4 மணிக்கு நடைபெறும்.
இதைத் தொடா்ந்து வரும் ஜன.14-ஆம் தேதி பொங்கல் விழா தொடங்குவதால், தொடா்ந்து 3 நாள்களும் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
