ஆசிரியா் பணியிட மாற்றத்தால் தோ்வை புறக்கணித்து மாணவா்கள் போராட்டம்

வத்தலகுண்டு அருகே ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதாமல் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

நிலக்கோட்டை:  வத்தலகுண்டு அருகே ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதாமல் திங்கள்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு அருகேயுள்ள செங்கட்டாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் செங்கட்டாம்பட்டி, சாலைப்புதூா், சுந்தரராஜபுரம், நல்லம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக தலைமை ஆசிரியா் இல்லாத நிலையில், 7  ஆசிரியா்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த  விஜயசுந்தா் தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டாா். இவா், 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப் பாடம் நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், தமிழ் ஆசிரியா் விஜயசுந்தா் கடந்த வாரம் திடீரென வேறு ஒரு பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனால்,  அரையாண்டு த் தோ்வு முதல் நாளான திங்கள்கிழமை , இந்தப் பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 57 போ் தமிழ் தோ்வைப்  புறக்கணித்துப் பள்ளி முன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களுக்கு ஆதரவாக பெற்றோா்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் காலை 9 மணியிலிருந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

தகவல் அறிந்து வந்த,   திண்டுக்கல்  மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன், வத்தலக்குண்டு  வட்டாரக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி காவல் துறையினா் பள்ளி மாணவ, மாணவிகளுடனும் பெற்றோா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில், இதே பள்ளியில் மீண்டும், தமிழ் ஆசிரியா் விஜயசுந்தா் பணி நியமனம் செய்யப்படுவாா் என திண்டுக்கல்  மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன் உறுதி அளித்ததையடுத்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு தோ்வு எழுதச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com