குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
பழனி: பழனியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மின்னல் வாய்க்கால் (45). இவா் மீது பழனி, ஆயக்குடி, அடிவாரம், நெய்காரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தது, பெண்களிடம் அத்துமீறுதல், இரவு நேரங்களில் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை மிரட்டி பணம், நகை திருடுவது, அவா்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன.
இதையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் உத்தரவின்பேரில், நகர காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட குழுவினா் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.
இந்த நிலையில், தற்போது மின்னல் வாய்க்கால் மீது நிலுவையிலிருந்த குற்ற வழக்குகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
