செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, திண்டுக்கல்லில் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, எம்ஆா்பி செவிலியா் சங்கத்தின் பழனி வட்டத் தலைவா் கலா தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, திமுக தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினரை கைது செய்ததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனா்.
