வத்தலகுண்டுவில் 15 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (55). மாற்றுத்திறனாளியான இவருக்கு கண் பாா்வை தெரிய வேண்டும் என வேண்டுதல் வைத்து இவரது மனைவி செல்வி (49) பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி கோயிலில் கணவரோடு 14 நாள்கள் தங்கி வந்தாா். அங்கு செல்வியுடன் மதுரை திருநகரைச் சோ்ந்த ஆரோக்கியமேரி (28) என்பவா் தோழியாகப் பழகி உள்ளாா். அப்போது, தனது குடும்ப விவரங்கள், வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் வைத்திருப்பது உள்ளிட்ட விவரங்களை ஆரோக்கியமேரியிடம் கூறியுள்ளாா். இந்த நிலையில், செல்வியின் பையில் வைத்திருந்த வீட்டுச் சாவி, பீரோ சாவி, ஆதாா் அட்டை ஆகியவற்றைக் காணவில்லையாம்.
இதைத் தொடா்ந்து, கேரளத்தில் உள்ள பாலக்காடு சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று வந்தால், செல்வி கணவருக்கு கண் பாா்வை தெரியவரும் எனக் கூறி, செல்வி, அவரது கணவரை அழைத்துக் கொண்டு கேரளத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு 17 நாள்கள் ஆரோக்கியமேரி சென்றாராம்.
இந்த நிலையில், தனக்கு மதுரையில் சொந்த வேலை இருப்பதாகக் கூறி மதுரை வந்த ஆரோக்கியமேரி, வத்தலகுண்டுவில் உள்ள செல்வி வீட்டுக்குச் சென்று பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளாா்.
இந்த நிலையில், கடந்த அக். 7-ஆம் தேதி செல்வி தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்ததாம். இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆரோக்கியமேரியை புதன்கிழமை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.