செங்கல் சூளைக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்
பழனி அருகே செங்கல் சூளை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இந்தச் செங்கல் சூளைகளுக்காக சுற்றுப்பகுதி தோட்டங்களில் இருந்து மண் அள்ளப்படுவதாலும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதாலும் விவசாயம் அழிவதோடு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு அந்தப் பகுதி மக்கள் நோய்களால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை தடாகம் பகுதியில் செயல்படும் தடை செய்யப்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்கள், பழனி அருகேயுள்ள இடங்களை வாங்கி செங்கல் சூளைகளைக் கட்டி வருகின்றனா். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
பழனியை அடுத்த ஐவா் மலை, தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள சமணா் படுகை சிறப்பிடமாகும். இதன் அருகிலேயும் தற்போது செங்கல் சூளை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அந்தப் பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
அரசு சாா்பில் பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டபோதிலும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதை எதிா்த்து பழனி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு ஐவா் மலை கிளைத் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ராமசாமி கண்டன உரையாற்றினாா். இதில் ஏராளமான விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு செங்கல் சூளைக்கு எதிராக முழக்கமிட்டனா். இதில் சங்கத்தின் ஒன்றியச் செயலா் கிருஷ்ணன், கிளைச் செயலா் பிரகாஷ், பொருளாளா் சரவணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

