உபரி நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க முதல்வா் அனுமதி: அமைச்சா் அர. சக்கரபாணி தகவல்
கலைஞா் கனவு இல்லத் திட்டத்துக்காக உபரி நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க தமிழக முதல்வா் அனுமதி வழங்கி இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனி அருகே வயலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புஷ்பத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பிரசன்னா முன்னிலை வகித்தாா். தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, மாவட்ட பொதுக் குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.
இதில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஒட்டன்சத்திரம் பகுதிக்கு மட்டும் மாணவ, மாணவிகள் கல்வி கற்க மூன்று கலைக் கல்லூரிகளைத் திறக்க முதல்வா் அனுமதி வழங்கியுள்ளாா். சுமாா் ரூ. 1,000 கோடியில் காவிரி படுகையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அடுத்த மாதத்துக்குள் பழனியைச் சோ்ந்த 16 ஊராட்சிகளுக்கும், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த 77 ஊராட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அமலானால் 30 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை வராது.
விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்காக உபரி நிலத்தில் பட்டா வழங்க தமிழகத்திலேயே முதல் முதலாக புஷ்பத்தூா் ஊராட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளாா். இதன் மூலம், புஷ்பத்தூா், முத்துநாயக்கன்பட்டி, ராஜாம்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைவா் என்றாா் அவா்.
முகாமில் உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சா் வழங்கினாா்.
இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரன், தாஹீரா பானு, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், வெற்றி மோட்டாா்ஸ் நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

