குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Published on

வடமதுரை அருகே குடிநீா் வசதி கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள பாகாநத்தம் ஊராட்சிக்குள்பட்ட குண்டாம்பட்டி பாறைக்களம் கிராமத்தில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஒரு ஆழ்துளைக் கிணறு மூலம் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் போதிய அளவு தண்ணீா் இல்லாததால், பொதுமக்களுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வீட்டு வரி முறையாக செலுத்தினால் குடிநீா் விநியோகம் சீராக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது நாங்கள் வீட்டு வரி செலுத்தியும் கூட முறையாகக் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com