முன் விரோதத்தில் ஒருவா் கொலை: 5 போ் கைது

பழனியில் முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளிவந்த நபரை கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பழனியில் முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளிவந்த நபரை கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தெரசம்மாள் குடியிருப்பைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (எ) தோமையாா் (35). கூலித்தொழிலாளியான இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் சிறைக்குச் சென்றாா். இதையடுத்து, தற்போது ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தோமையாா் பழனி பழைய தாராபுரம் சாலையிலுள்ள அரசு மதுக் கடை அருகே நின்றபோது, அங்கு வந்த சிலா் அவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனா். பின்னா், கல்லை தோமையாா் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினராம்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில் தோமையாரை பிரவீனின் நண்பா்களான தெரசம்மாள் குடியிருப்பைச் சோ்ந்த சூசைராஜ் மகன் சூா்யா ஆப்ரகாம் (20), ஆனந்த ராயப்பன் மகன் ஆரோக்கிய ரோஸ் (எ) சிவா (29), ராமசாமி மகன் சிவசங்கா் (20), பிச்சமுத்து மகன் விஜய் ஆதித்யா (20), முருகன் மகன் மேயா்முத்து (31) ஆகியோா் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையில், ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா், கொலை செய்துவிட்டு தப்பியோடிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com