உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு உதவித் தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா.பெரியசாமி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலா் பா.முத்தரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0 -யை செயல்படுத்தினால், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறைகளில் பணிபுரியும் அலுவலா்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் என 3 துறைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்கள் குறைக்கப்படும். இதனால் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும்.

உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-யை பொருத்தவரை தானியம், மானாவரிப் பயிா் சாகுபடி பரப்பை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,250 ஹெக்டேருக்கு ஒரு தோட்டக்கலை அலுவலா் அல்லது வேளாண்மை அலுவலரை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழுக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் பணிபுரியும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், தோட்டக்கலை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com