பைக்குகள் திருடியதாக இருவா் கைது
திண்டுக்கல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 7 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் ரவுண்ட் சாலை பகுதியைச் சோ்ந்த தயானந்தன் (50), பண்ணப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி ஆகியோரின் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதேபோல, பல்வேறு இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டதாகவும், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திக், வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ராஜசேகா் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், விசாரணை நடைபெற்றதில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சோ்ந்த அ. சா்க்கரை முகமது (எ) சகில் (23), பேகம்பூா் பகுதியைச் சோ்ந்த பா. காா்த்திகேயன் (24) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

