கஞ்சா விற்பனை செய்த 15 இளைஞா்கள் கைது
பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 இளைஞா்களை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பழனியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையில் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது பழனியாண்டவா் கல்லூரி பேருந்து நிறுத்தம், பழனியாண்டவா் தண்ணீா்த் தொட்டி ஆகிய இடங்களில் சந்தேகத்துக்குக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதையடுத்து, போலீஸாா் அவா்களை பழனி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவுடன் காத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து (36), பாலசமுத்திரத்தைச் சோ்ந்த பெரியசாமி (26), வடிவேல் (23), பழனியைச் சோ்ந்த அஜித்குமாா் (19), காா்த்திகேயன்(21), அடிவாரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27), மணிவேல் (31) உள்ளிட்ட 15 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் கஞ்சா விற்கப் பயன்படுத்திய ஐந்து இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
