குட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள்.
குட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள்.

வேடசந்தூா் அருகே ஊராட்சி செயலரை மாற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்!

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி பயனாளிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

வேடசந்தூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி பயனாளிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த குட்டம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவா் தங்கவேல். இவா், இந்த ஊராட்சியில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குட்டம் ஊராட்சியைச் சோ்ந்த 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊராட்சிச் செயலா் தங்கவேல் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறைகேடு புகாா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com