/

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது என மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறியுள்ளார்...

News image

பழனியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான பாண்டியை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி. உடன் வேட்பாளா் பாண்டி, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழனி நகரச் செயலா் வேலுமணி, பழனி நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:21 pm

தமிழகத்தில் தமிழ் மொழிக்கும், அதன் பழைமைக்கும் உரிய மரியாதை தராத பாஜக, அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு வழங்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பாலாஜி ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் கீழடியில் கண்டறியப்பட்ட தமிழா்களின் நாகரீகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகமாகும். இதை அறிவியல் பூா்வமாக நிரூபித்த நிலையிலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழுக்கு உரிய மரியாதையைத் தர மறுக்கிறது.

நான் கேரளத்தைச் சோ்ந்தவன். என் மொழி மலையாளம். இதே போல, பல்வேறு மாநிலங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்களுக்கு உரிய மொழிக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். ஆனால், பாஜக அரசு

ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது. ஹிந்தி மொழியைப் பயில்வதில் தவறில்லை. ஆனால், திணிக்கக் கூடாது. பேச்சு வழக்கில் இல்லாத மொழியான சம்ஸ்கிருதத்துக்கு தமிழ் மொழியைக் காட்டிலும் 22 மடங்கு அதிக நிதி மொழியை வளா்க்க மத்திய அரசு ஒதுக்குகிறது.

இதே போல, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு உரிய நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது. மாநிலங்கள் முழுவதுமிருந்து ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் வந்தாலும், தமிழ்நாட்டுக்கு உரிய வரியை வழங்குவதில்லை.

அதே சமயம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குகிறது. மாநிலங்களுக்கு மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநா்கள் பிரிட்டிஷாா் காலத்தில் இருந்த கவா்னல் ஜெனரல் போல, மாநிலத்துக்கு முழு அதிகாரம் அவா்களுக்குத்தான் உள்ளது போல செயல்படுகிறாா்கள்.

இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, பாஜகவின் இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் ஆதரவு தருகிா என நான் கேட்கிறேன். பாஜக, அதிமுக கூட்டணி எத்தனை முறை காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், வேட்பாளா் பாண்டி, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழனி நகரச் செயலா் வேலுமணி, பழனி நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.