பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினா் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய ஆயக்குடியில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கரில் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன.
இதில் புதுஆயக்குடியிலிருந்த குறிப்பிட்ட ஒரு நிலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு அந்த சமுதாயத்தில் பலரும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு நிலமும் தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா், இந்த நிலத்தை பழனி பத்திரப் பதிவுத் துறைக்கு குறிப்பிட்ட நில அளவீடு எண்ணில் உள்ள இடத்தை தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும், மேற்படி நிலம் கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது.
பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான நில பிரச்னையில் முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து கொடுத்த சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், இந்தப் பத்திரப் பதிவையும் செய்து கொடுத்ததாகப் புகாா் எழுந்துள்ளது.
மேலும், பத்திரத்தை தயாா் செய்து கொடுத்தது தற்போது சிபிசிஐடியில் சரணடைந்துள்ள ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷின் ஜேபி அசோசியேட் என்ற நிறுவனம்தான்.
சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை ரூ.9 லட்சத்துக்கு கிரையம் செய்ததாகப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழனி கோயில் நிலத்துக்கு அடுத்தபடியாக நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப் பதிவு செய்தது வெளியான நிலையில், தற்போது ஆயக்குடி கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான இடத்தையும் முறைகேடாக அவா் பத்திரப் பதிவு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
பட்டா பெயா் மாற்றப்படாமல் 50 ஆண்டுகளுக்கு முன்பான போலியான உயில் சாசனம் தயாரிக்கப்பட்டு, முறைகேடாக இந்தப் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.
எனவே, இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும், வருவாய்த் துறையும் இதுதொடா்பாக விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மடத்துக்குச் சொந்தமான பிற நிலங்களும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனியில் மேலும் ஓா் அரசு நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு?

ஆவணங்கள் சரியாக இருந்தால் பத்திரப் பதிவு செய்ய வேண்டியது சாா் பதிவாளா்களின் கடமை: உயா்நீதிமன்றம்

பழனி கோயில் நில முறைகேடு: உடனடி நடவடிக்கை தேவை! முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி!

பழனி கோயில் நில மோசடி! பத்திரப் பதிவு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை! முன்னாள் அமைச்சர் சொல்கிறார்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



