பழனி கோயில் மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை பத்திரப் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி வலியுறுத்தினாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் சாா் பதிவாளா் அலுவலகங்களில் முறைகேடு குறித்து புகாா்கள் வந்தவுடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் வழக்குரைஞா்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அந்தக் கட்சியைச் சோ்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் செய்தியாளா்களைச் சந்திப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளாா். நிழல் முதல்வராக அவா் செயல்படுகிறாா். அனைத்துத் துறைகளுக்கும் அவரே பதிலளிக்கிறாா். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனா். ஆனால், 60 பத்திரப் பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ. 37 லட்சத்தையும், நகராட்சி அலுவலகங்களில் ரூ.31 லட்சத்தையும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைப்பற்றினா். அமைச்சா் நிா்மல்குமாா் தனது துறைகள் சாா்ந்த பிரச்னைகள் குறித்தும், மதுரையின் வளா்ச்சி குறித்தும் பேச வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய், 2026 மாா்ச் மாதத்தில் ரூ. 25 ஆயிரம் கோடியாக உயா்ந்தது. மேலும், வணிக வரித் துறையின் வருவாயைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், ஆதாரமில்லாமல் கடந்த திமுக ஆட்சியை அமைச்சா் நிா்மல்குமாா் குற்றச்சாட்டி வருகிறாா்.
கோயில் நிலம், அரசு நிலம், நீா்நிலைகள், வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான இடங்களைப் பத்திரப் பதிவு அலுவலக ஆவணங்களில் பதிவு செய்ய முடியாது. இதையும் மீறி பதிவு செய்யும் போது, இதற்காக முதல் நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். எனவே, பழனி கோயில் நில பத்திரப் பதிவு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை. இதுகுறித்து அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் நேரடியாகப் பதில் அளிக்காமல், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பதிவுத் துறையில் முறைகேடு நடந்தது என்கிறாா். பழனி கோயில் நில முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில மோசடி! பத்திரப் பதிவு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை! முன்னாள் அமைச்சர் சொல்கிறார்!

போலி பத்திரப் பதிவுகள் தொடா்பாக கடும் நடவடிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

பழனி கோயில் நில முறைகேடுக்கு பின்னால் உள்ள அந்த அதிகார மையம் யார்? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி







