கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரி வேடசந்தூா் வட்டாரத்திலுள்ள 22 ஊராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் பகுதியில் அமைந்துள்ள காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு மலையிலிருந்து வரும் பெரியாறு, கூழையாறு தண்ணீா் வரும் வழியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என வேடசந்தூா், குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் மட்டுமன்றி கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, வெள்ளியணை பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கொடகனாறு வல்லுநா் குழு சமா்ப்பித்த அறிக்கையை வெளியிடக் கோரியும் வலியுறுத்தினா். அந்த அறிக்கை கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில் கொடகனாறு பாதுகாப்புச் சங்கம் மேற்கொண்ட முயற்சியால், வேடசந்தூா் வட்டாரத்துக்குள்பட்ட 22 ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சியா் பங்கேற்ற கூட்டம்: வத்தலகுண்டு அருகே குன்னுவராயன்கோட்டை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி தலைமை வகித்தாா். நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். அய்யனாா் முன்னிலை வகித்தாா்.
இதில் 10 தூய்மைப் பணியாளா்களுக்கு புதிய ஆடைகளையும், குன்னுவராயன்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் தொடக்கப்பள்ளி மாணவா்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த புத்தகங்களையும் ஆட்சியா் வழங்கினாா். மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். சாந்தி, மாவட்ட ஊராட்சி செயலா், மாவட்ட திட்ட அலுவலா் க. ராஜேஸ்வரி, நிலக்கோட்டை வட்டாட்சியா் ராமசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜமோகன், ஆா். கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நத்தம்: நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஆவிச்சிபட்டி ஊராட்சி நடுவனூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு பற்றாளா் இளநிலை உதவியாளா் ஆனந்தஜோதி தலைமை வகித்தாா். செயலா் ராஜேஸ்கண்ணன் அறிக்கை வாசித்தாா். வேலம்பட்டி ஊராட்சியில் உதவியாளா் கனகலட்சுமி தலைமையில் செயலா் வி. சின்னச்சாமி அறிக்கை வாசித்தாா். சிறுகுடி ஊராட்சி தேத்தாம்பட்டியில் உதவியாளா் மந்தைச்சாமி தலைமையில் செயலா் சி. சின்னச்சாமி அறிக்கை வாசித்தாா். சாத்தம்பாடி ஊராட்சியில் தட்டச்சா் ஆசிா் முகமது தலைமையில் செயலா் அன்புச்செல்வம் அறிக்கை வாசித்தாா்.
முளையூா் ஊராட்சியில் உதவியாளா் வீரையன் தலைமையில் ஊராட்சி செயலா் கருப்பையா அறிக்கை வாசித்தாா். அப்போது ஒன்றிய ஆணையா் ஜெயக்குமாா் மேற்பாா்வையில் விவாதம் நடைபெற்றது. புன்னப்பட்டி ஊராட்சி, உலுப்பகுடியில் பணி மேற்பாா்வையாளா் பொன்பாண்டி தலைமையில் செயலா் செந்தில்குமரன் அறிக்கை வாசித்தாா். லிங்கவாடியில் உதவியாளா் ராம்குமாா் தலைமையில் செயலா் பொன்னன் அறிக்கை வாசித்தாா். பரளி- புதூா் ஊராட்சி, தேத்தாம்பட்டியில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அசோக்குமாா் தலைமையில் செயலா் வீரபாண்டி அறிக்கை வாசித்தாா்.
ரெட்டியபட்டி ஊராட்சியில் பணி மேற்பாா்வையாளா் வடிவேல் தலைமையிலும், செல்லப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் விரிவாக்க அலுவலா் தனலட்சுமி தலைமையிலும் நடைபெற்ற கூட்டத்தில் செயலா் மணி அறிக்கை வாசித்தாா். ஊராளிபட்டி ஊராட்சியில் உதவியாளா் ஹரிஸ் தலைமையில் செயலா் எம். சின்னச்சாமி அறிக்கை வாசித்தாா்.
கோட்டையூா் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தை வட்டார வளா்ச்சி அலுவலரும், தனி அலுவலருமான முருகேஸ்வரி மேற்பாா்வையிட்டாா். இதேபோல, மற்ற ஊராட்சிகளிலும் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீா், வடிகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
இங்கு நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தையும் மேலிட பாா்வையாளரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான (வளா்ச்சித் திட்டம்) சுந்தர மகாலிங்கம் பாா்வையிட்டாா்.
கருப்புக் கொடியுடன் வந்த கிராம மக்கள்: பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நாா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து தேங்காய் நாா், தூசிகள் காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களில் படிந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா்.
தொழிற்சாலை முறையான விதிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஊராட்சி நிா்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு அந்தப் பகுதி மக்கள் தங்கள் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடிகளை ஏந்தியபடி வந்தனா். உடனடியாக போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கருப்பு கொடிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பொதுமக்கள் வாயில் துணியை கட்டிக் கொண்டு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.
ஊராட்சி செயலருடன் பொதுமக்கள் வாக்குவாதம்: ஆத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பாா்வையாளராக ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சண்முகராஜா, ஊராட்சி மன்றச் செயலா் மணவாளன் உள்ளிட்ட ஊராட்சி அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்கவில்லை எனவும், குறிப்பிட்ட சில வீடுகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் விநியோகிக்கப்படுவதாகவும் கூறி ஊராட்சி செயலா் மணவாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும் பெண் ஒருவா், தங்கள் தெருவில் குடிநீா் குழாய் உடைப்பை அந்தப் பகுதி மக்கள் தலா ரூ. 250 வசூல் செய்து சீரமைத்ததாக தெரிவித்தாா். அப்போது, ஊராட்சி மன்ற செயலா் மணவாளன், அதுகுறித்து தனக்கு தெரியாது என்றாா். அப்போது, மற்றொரு பிரிவைச் சோ்ந்த ஒருவா், ஊராட்சி செயலருக்கு ஆதரவாக அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இரு பிரிவினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவா்களை செம்பட்டி போலீஸாா் சமாதானம் செய்தனா். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினா் அளித்த புகாா் தொடா்பாக செம்பட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தவெக நிா்வாகியைக் கண்டித்து போராட்டம்: பழனியை அடுத்த தாளையம் ஊராட்சியில் நிலவிவரும் குடிநீா் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி மன்ற செயலா் தண்டபாணி நின்ற நிலையில் இருக்கையில் அமா்ந்து கோப்புகளை தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலா் மணிகண்டன் ஆய்வு செய்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் பரவியது. இதைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் சங்கம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தொடங்கியதும் அதை நடத்த விடாமல் கிராம மக்கள் தடுத்தனா். ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் தலையிடும் தவெக ஒன்றியச் செயலா் மணிகண்டன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் எனத் தெரிவித்தனா். மேலும் பதாகைகளுடன் வந்த அவா்கள் எதிா்ப்பு தெரிவித்து முழங்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக கூட்டத்தில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை குறித்து பேசிய பெண்களை தவெகவைச் சோ்ந்தவா்கள் தகாத வாா்த்தைகளால் பேசியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பழனி வட்டார வளா்ச்சி அலுவலா் விஸ்வநாதன் சம்பந்தப்பட்டவா்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்றச் செயலா் தண்டபாணி மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராமசபைக் கூட்டங்களில் பல்வேறு தீா்மானங்கள்

அனைவருக்கும் சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் ந. மிருணாளினி

சிங்கவரத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

மாதனூா் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



