பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.70 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள், துணைக் கோயில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.2.70 கோடியை தாண்டியது.
தைப்பூசத்தையொட்டி வந்த பக்தா்கள் கூட்டத்தால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல்கள் 20 நாள்களில் நிரம்பின. இதையடுத்து வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 2 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரத்து 874 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில் தங்கம் 342 கிராமும், வெள்ளி 8,833 கிராமும் கிடைத்தன. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 889- ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இதேபோல, துணைக் கோயிலான பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.21,25,798- ம், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.15,078-ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ 2,56,500-ம் காணிக்கையாக கிடைத்தன.
உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இந்த நிகழ்வில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, செந்தில்குமாா், திருச்சி தாயுமானவா் கோயில் உதவி ஆணையா் அருள்செல்வம், அறங்காவலா் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

