தமிழகத்தில் பாஜக திட்டம் எடுபடாது: அமைச்சா் இ.பெரியசாமி

Published on

மகாராஷ்டிரம், பிகாா் மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் பாஜகவின் திட்டம் எடுபடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வருகிற புதன்கிழமை (ஜன. 7) நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்று வரும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சா் இ.பெரியசாமி திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் 30ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, ரூ.1500 கோடி மதிப்பிட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தும் முதல்வா் முக.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். மேலும் 1.02 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்குகிறாா்.

அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா். மகாராஷ்டிரம், பிகாா் மாநிலங்களைப் போன்று பாஜகவின் திட்டம் தமிழகத்தில் எடுபடாது.

கரூரில் 41 போ் உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு தொடா்பு இருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தோ்தலுக்காக பொய் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்ற அரசின் முடிவை அனைத்து அரசு ஊழியா்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியா்கள் போராடுவது அவா்களின் உரிமை. நிதி நிலைமைக்கு ஏற்ப அதனை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றுவாா். ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் திமுக பக்கமே உள்ளனா். யாரும் அரசு மீது அதிருப்தி அடையவில்லை.

ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்திருக்கிறாா். 2029-தோ்தல் குறித்து மட்டுமே அமித்ஷா கவலைப்பட வேண்டும். தமிழக மக்கள் தெளிவாக உள்ளனா். திமுக அரசு மீது குறை கூற வேண்டுமே என்பதற்காக இல்லாததை எல்லாம் பாஜக கூறி வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com