திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொடைக்கானலில் ‘சுற்றுலா முதலீட்டு பூங்கா’ உள்பட 8 புதிய திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்தாா்.
Published on

கொடைக்கானலில் ‘சுற்றுலா முதலீட்டு பூங்கா’ உள்பட 8 புதிய திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்தாா்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவின்போது அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் ரூ.14.20 கோடியில் மேம்படுத்தப்படும். திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 22 வாா்டுகளில் பயன்பாட்டிலுள்ள பழைய புதை சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.38 கோடியில் சீரமைக்கப்படும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் புனித தீா்த்தங்களான இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும்.

நத்தம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாா்க்கம்பட்டியில் உலகத் தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.

கொடைக்கானலை அடுத்த வில்பட்டி ஊராட்சியில் சிப்காட் மூலம், சுற்றுலாப் பயணிகளுக்காக 100 ஏக்கரில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த ‘சுற்றுலா முதலீட்டு பூங்கா’ அமைக்கப்படும். ஒட்டன்சத்திரம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் கண் வலிக் கிழங்கு விதைகளுக்கு நிலையான, நியாயமான விலை கிடைப்பதற்கு மத்திய அரசின் சம்மந்தப்பட்ட துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.17 கோடியில் புதிய கழிவுநீா்க் கால்வாய் அமைக்கப்படும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com