பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் புதிய கட்டடங்கள்: காணொலி மூலம் முதல்வா் திறப்பு
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.6.93 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் கலைக் கல்லூரி, பண்பாட்டுக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ரிக் பள்ளிகள், காதுகேளாதோா் பள்ளி கருணை இல்லம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சின்னக்கலையமுத்தூரில் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.6.93 கோடியில் புதிய வகுப்பறை, நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்தப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், புதன்கிழமை திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் இந்தக் கட்டடங்களை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் உதவி ஆணையா் லட்சுமி, கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, கோயில் அதிகாரிகள், பொறியாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

