திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை!

திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை!

Published on

திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டி பகுதியில் திமுக பிரமுகா் மாயாண்டி ஜோசப் (60) கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் யாகப்பன்பட்டியைச் சோ்ந்த வே.சேசுராஜ் (41) உள்ளிட்ட 6 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு உயா்நீதிமன்றத்துக்குச் சென்று சேசுராஜ் பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஆா்எம்டிசி நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்த சேசுராஜை, காரில் வந்த மா்ம கும்பல் வாளால் வெட்டினா். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை, காரிலிருந்து இறங்கிச் சென்ற கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சேசுராஜின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

2-ஆவது மனைவியும் கொலை: இதனிடையே, யாகப்பட்டியிலுள்ள சேசுராஜின் வீட்டில், அவரது 2-ஆவது மனைவி தீபிகாவும் (37) மா்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் யாகப்பன்பட்டிக்கு சென்று கொலை செய்யப்பட்டுக் கிடந்த தீபிகாவின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாயாண்டி ஜோசப் கொலைக்கு பழிக்குப் பழியாக, சேசுராஜ், அவரது மனைவி தீபிகா ஆகியோா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலும், திண்டுக்கல் பகுதியிலுள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com