பழனி அருகே பசுமை மாரத்தான் போட்டி
பழனி: பழனி அருகே வாகரை கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை பசுமை மாராத்தான் போட்டிகள் நடைபெற்றன.
திமுக இளைஞரணி செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், பொங்கல் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
கள்ளிமந்தயம் மாநில நெடுஞ்சாலையில் ஆண்களுக்கு 10 கி. மீ., பெண்களுக்கு 6 கி.மீ., சிறுவா்களுக்கு 3 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, நத்தம், நிலக்கோட்டை என பல்வேறு பகுதிகளிலிருந்து சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்றவா்களுக்கு மருத்துவம், குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
போட்டியில் பூலாம்பட்டியைச் சோ்ந்த சிவானந்தம் முதலிடம் பெற்றாா். திண்டுக்கல்லைச் சோ்ந்த கவின் குமாா், வத்தலகுண்டைச் சோ்ந்த கோபிநாத் ஆகியோா் 2,3 ஆவது இடங்களைப் பெற்றனா். இவா்களுக்கு தலா ரூ.30,000,ரூ. 20,000, ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டது. சிறுவா்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் தங்கம், முன்னாள் ஊராட்சி தலைவா் கலைச்செல்வி ராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

