விபத்தில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே யுள்ள பாலசமுத்திரத்தை சோ்ந்த விவசாயி விபத்தில் மூளைச்சாவு அடைந்ததைத் தொடா்ந்து, அவரது உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானம் செய்யப்பட்டன.
பாலசமுத்திரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தேவராஜ் மகன் தனிஷ்லாஸ் (38). விவசாயியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இவா் கடந்த 12-ஆம் தேதி தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பழனி சிவகிரிப்பட்டி புறவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோா் விருப்பப்படி தனிஷ்லாஸின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அவரது உடல் பாலசமுத்திரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் திருமலை, பழனி வட்டாட்சியா் பிரசன்னா உள்ளிட்டோா் உடலுக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

