அதிமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தற்போது திமுக செயல்படுத்தும் திட்டங்களே! - அமைச்சா் அர. சக்கரபாணி
அதிமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தற்போது திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை காப்பி அடித்தது போல இருப்பதாக தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனி அருகே வயலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக புதிய அலுவலக திறப்பு விழாவுக்கு அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட தொழிலாளா் அணி நிா்வாகி நாகராஜன் வரவேற்றாா். ஒன்றியச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஈஸ்வரசாமி உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனா்.
இதில், வயலூா் கிராமத்தில் சொந்த வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு அரசு சாா்பில் வீட்டுமனை பட்டா வழங்கி, கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுத்ததற்கு திரளான பெண்கள் அமைச்சா் அர. சக்கரபாணிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அதிமுக, தவெக கட்சிகளில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த இளைஞா்களுக்கு அமைச்சா் சால்வைகள் அணிவித்தாா்.
இதன் பிறகு அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ. 1000, பெண்கள் விடியல் பயணத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியுள்ளாா். அப்போது இவற்றை சாத்தியமில்லை என விமா்சித்தவா் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தற்போது 1.32 கோடி பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் தோ்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களான பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், அன்புக் கரங்கள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டியவா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட வில்லை. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணம், மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு இலவச கைப்பேசி, வீடுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும் எனக் கூறினா். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிதி பற்றாக்குறை எனக் கூறி அந்தத் திட்டங்களை நிறைவேற்ற இயலாது எனக் கூறிவிட்டனா்.
ஆனால் முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதியையும் நிறைவேற்றி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறாா். அதிமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தற்போது திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை காப்பி அடித்தது போல உள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் திமுக தோ்தல் அறிக்கையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவா் என்றாா் அவா்.

