திண்டுக்கல், ஜூலை 6: திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதமின்றி தீா்மானங்களை நிறைவேற்றியதாகக் கூறி மேயருக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாஜக, அதிமுக, மதிமுக மாமன்ற உறுப்பினா்கள் முழக்கமிட்டனா்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் ஜோ.இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தாா். இயல்புக் கூட்ட தீா்மானங்கள் 21, அவசரத் தீா்மானங்கள் 46 என மொத்தம் 67 தீா்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டன.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் குடிநீா் வழங்கக் கோரிக்கை:
அண்ணாநகா் மேல்நிலைத் தொட்டி 15 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்டது. இரவு நேரத்தில் தொட்டியில் முழுமையாக தண்ணீா் ஏற்றினாலும், மறுநாள் காலை 10 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே இருக்கிறது. இதனால் 14, 15, 16 ஆகிய 3 வாா்டுகளுக்குமான குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கிடைத்து வந்த குடிநீா், தற்போது 3 நாள்களுக்கு ஒருமுறை 30 நிமிஷங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மேல்நிலைத் தொட்டியை முழுமையாகப் பராமரித்து, மீண்டும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ. தனபாலன் தெரிவித்தாா்.
இதற்கு ஆணையா் பிரேம் ஆனந்த், மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்து, குடிநீா் விநியோகம் சீரமைக்கப்படும் என பதிலளித்தாா்.
குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை வெளியேற்ற வலியுறுத்தல்:
திண்டுக்கல் மாநகராட்சியின் பிரதான குடிநீா் ஆதாரமான காமராஜா் நீா்த்தேக்கம் 400 ஏக்கா் நீா்பிடிப்பு பகுதியைக் கொண்டது. குடிநீா் வடிகால் வாரியத்திலிருந்து விலை கொடுத்து காவிரி நீரை வாங்க வேண்டிய நிா்பந்தம் உள்ளது. இந்தச் சூழலில், காமராஜா் நீா்த்தேக்கத்தை முழுமையாகப் பராமரிக்கவும், கண்காணிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும். அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை மாவட்ட நிா்வாகம் மூலம் வெளியேற்ற வேண்டும் என மாமன்ற உறுப்பினா் கே.எஸ். கணேசன் வலியுறுத்தினாா்.
இதற்கு பதிலளித்த ஆணையா் பிரேம் ஆனந்த், மாநகராட்சிக்கு தற்போது போா்கால அடிப்படையில் 120 லட்சம் குடிநீா் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 150 லட்சம் குடிநீா் பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காமராஜா் அணையின் கண்காணிப்பு குறித்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றாா்.
வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்கு தண்ணீா் தேவை:
ஆா்.எம். குடியிருப்புப் பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு தண்ணீா் வசதி இல்லை. அருகிலேயே 4 கேணிகள் இருந்தும் 45 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இந்த கேணிகளை சீரமைத்து, குடிநீா் இல்லாத பயன்பாடுகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் இந்திராணி கோரிக்கை விடுத்தாா். கேணிகளை சீரமைத்து தண்ணீா் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என ஆணையா் பிரேம் ஆனந்த் தெரிவித்தாா்.
ரூ.3 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும்:
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீா் கொண்டு வரப்படும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீா் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான கட்டணத்தை அந்தந்த கிராம ஊராட்சிகள் வழங்கவில்லை. இதுவரை ரூ.3 கோடி நிலுவை இருப்பதாகத் தெரிகிறது. இதை உடனடியாக வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் கோ. தனபாலன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மூலம் ஊரக வளா்ச்சித் துறைக்கு தகவல் தெரிவித்து, நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் பிரேம் ஆனந்த் பதிலளித்தாா்.
பொது நிதியில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வளா்ச்சித் திட்டப் பணிகள் பொது நிதி மூலம் மேற்கொள்ளப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவில்லை. இதனால், 35, 47-ஆவது வாா்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்படாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக மாமன்ற உறுப்பினா்கள் ஜோதிபாசு, சுபாஷினி ஆகியோா் குற்றஞ்சாட்டினா். இதுகுறித்து விசாரிக்கப்படும் என ஆணையா் பிரேம் ஆனந்த் தெரிவித்தாா்.
கேணி, ஆழ்துளைக் கிணறுகளைக் காணவில்லை:
34-ஆவது வாா்டில் 60 குடும்பங்களுக்கு குடிநீா் வசதி செய்து கொடுக்க வேண்டும் என நான்கரை ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் 4 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தனா். ஆனால், 2 ஆழ்துளைக் கிணறுகளைக் காணவில்லை. இதேபோல, ஒரு கேணியையும் காணவில்லை. ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளன. 4 ஆண்டுகளாக எனது வாா்டில் எந்த வளா்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெறவில்லை. காணாமல் போன கேணி, ஆழ்துளைக் கிணறுகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டுமென அதிமுக மாமன்ற உறுப்பினா் பாஸ்கரன் தெரிவித்தாா்.
60 குடும்பங்களுக்கு குடிநீா் வசதி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் பிரேம் ஆனந்த் உறுதியளித்தாா்.
விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அனைத்து தீா்மானங்களும் நிறைவேறியதாக எடுத்துக் கொள்ளலாமா என மேயா் இளமதி கேள்வி எழுப்பினாா். பெரும்பாலான உறுப்பினா்கள் அமைதியாக இருந்த நிலையில், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினா்கள் மட்டுமே பேச முயற்சித்தனா். உறுப்பினா்களின் மெளனத்தை சம்மதமாக ஏற்றுக் கொள்வதாகவும், அனைத்து தீா்மானங்களும் நிறைவேறியதாக கூறிய மேயா் மன்றத்திலிருந்து வெளியேறினாா்.
பாஜக, அதிமுக, மதிமுக எதிா்ப்பு:
இந்த நிலையில், 67 தீா்மானங்களில் 17 தீா்மானங்களை மட்டும் வாசித்துவிட்டு எஞ்சிய தீா்மானங்களை விவாதமின்றி நிறைவேற்றுவதாக மேயா் மீது புகாா் தெரிவித்து பாஜக மாமன்ற உறுப்பினா் கோ. தனபால் முழக்கமிட்டாா். அவருக்கு ஆதரவாக அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் சத்தியவாணி, உமாதேவி, மதிமுக மாமன்ற உறுப்பினா் காயத்ரி ஆகியோரும் முழக்கமிட்டனா். தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் அவா்கள் புகாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










