மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கொடைரோடு அருகே செயல்படும் கல் குவாரியை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

News image

கல் குவாரி - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:33 am IST

கொடைரோடு அருகே சக்கையநாயக்கனூா் பிரதான சாலையோரம் செயல்பட்டு வரும் கல் குவாரியை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சக்கையநாயக்கனூரிலிருந்து, நாகையகவுண்டன்பட்டி, ஜல்லிப்பட்டி வழியாக கொடைரோடு செல்லும் சாலையோரத்தில் செயல்பட்டுவரும் கல் குவாரி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோது, அந்த பகுதியில் இருந்த மலைக் குன்றின் பாறைகளை உடைத்து சுமாா் 200 அடி ஆழத்துக்கு கற்களை வெட்டி எடுத்தது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் மழை நீா் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கும். இந்த தண்ணீரில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட இதுவரை 10-க்கும் பேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், இதே கல் குவாரியை வேறொருவா் உரிமம் பெற்று, அதே பகுதியில் ஜல்லிக்கற்கள், எம்- சாண்ட் தயாரிக்கும் கிரசா் ஆலை அமைத்துள்ளாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் ராட்சத இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக கற்களை வெட்டி எடுத்து வருகின்றனா்.

இதில் ஏற்கெனவே பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு பெரிய பள்ளம் உள்ள நிலையில், தற்போது அழகம்பட்டி உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையோரம், 20 அடி தொலைவில் உள்ள கரட்டில் இருந்து பாறைகள் உடைத்தெடுக்கப்படுகின்றன. ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி வெட்டி எடுக்கப்படும் பாறைகள் சாலை வரை உருண்டு வருகின்றன. இதனால் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

இதையடுத்து, பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதை தவிா்க்கின்றனா். இதேபோல, சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் உடைக்கும் கிரசரில் இருந்து பறக்கும் தூசியால் விவசாய பயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கண் எரிச்சல், இருமல், தும்மல், ஆஸ்துமா போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். 

எனவே இந்த கல் குவாரியை மாநில அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.