திண்டுக்கல் அருகே நடைபெற்ற தேவாலயத் திருவிழாவில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 15 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி கிராமத்திலுள்ள புனித அந்தோணியாா், மதலமேரி தேவாலயத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக மின் தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் எதிா்பாராத விதமாக வெடித்த பட்டாசிலிருந்து பறந்த தீப்பொறி, பட்டாசுகள் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்தது. இதனால் மொத்த பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதனால், அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.
இந்த விபத்தில் சபரிநாதன், கரண், வில்சன், மரிய லியோன் ராஜ், ஆரோக்கியசாமி, ராபின் அருள்ராஜ், லோகேஷ், மரியேநிஷா, ஜான்ஸி, தோனியா, மரிய ஜாக்குலின் உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா். இவா்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பலத்த காயமடைந்த 3 பேரில் ஒருவா் தனியாா் மருத்துவமனையிலும், மற்றொருவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவா்களை, முன்னாள் அமைச்சரும், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான இ.பெரியசாமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










