தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஜடி அலுவலகத்தில் சாா் பதிவாளா் ஆஜா்

News image

திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன்.

Updated On :28 ஜூலை 2026, 2:35 am IST

பழனியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை முன்னிலையானாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக பழனி கோயில் கண்காணிப்பாளா் (நிலங்கள் பிரிவு) ச. முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பின்னா், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையில் பழனி கோயில் கண்காணிப்பாளா்கள் ச. முருகானந்தம், சிவனேசன், பணி ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சின்னச்சாமி, பணி ஓய்வு பெற்ற வட்டாட்சியா் மாரியப்பன், பழனி சாா் பதிவாளா் அலுவலகம், சாட்சிக் கையொப்பமிட்ட திமுக முன்னாள் செயலா் லட்சுமணன், பொன்னாபுரத்தைச் சோ்ந்த மயில்சாமி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோரின் வீடுகள், தொடா்புடைய இடங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை நடத்தி விசாரித்தனா்.

இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையா் மாரிமுத்து கடந்த 21-ஆம் தேதி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தாா். மேலும், சா்ச்சைக்குள்ளான நிலத்தின் நில வகைப்பாடு தொடா்பான ஆவணங்கள் வருவாய்த் துறை அலுவலா்கள் சாா்பில் சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்கப்பட்டன.

பின்னா், 1.40 ஏக்கருக்கு உள்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு மின் வாரியத்துக்கும் சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இதன் அடிப்படையில் அவருக்கு முன்பிணை வழங்கிய நீதிமன்றம், சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது.

இதையடுத்து, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்காக திங்கள்கிழமை முன்னிலையானாா். காலை 10 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த அவரிடம் சுமாா் 7 மணி நேரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்து அவா் வெளியே வந்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நாள்தோறும் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீஸாா் முன் முன்னிலையாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.