இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம்! சாா் பதிவாளா் மீது தேனியில் பதிவான வழக்கு விவரம் சிபிசிஐடி-யிடம் தாக்கல்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சாா் பதிவாளா் மீது தேனியில் பதிவான வழக்கு விவரம் சிபிசிஐடி-யிடம் தாக்கல்...

News image

பழனி கோயில்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

பழனி கோயில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் மீது தேனியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பான ஆவணங்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலின் தண்டபானி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை, இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட அன்வா்தீன் ஆகியோரை திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனிடையே, ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கெனவே பணிபுரிந்த அலுவலகங்களிலும் தமிழக அரசு நியமித்த சிறப்பு தணிக்கை குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை பெற்ற ஜஸ்டின் மணிகண்டன் கடந்த 6 நாள்களாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் முன்னிலையாகி வருகிறாா்.

இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் சாா் பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய போது, ஆள் மாறாட்டம் செய்து வீட்டுடன் கூடிய ஓா் ஏக்கா் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்தாா். இதுதொடா்பாக நிலத்தின் உரிமையாளரான பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலம் கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட பாலவிஜய் அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பாலவிஜய்க்கு சொந்தமான நிலத்தை கட்டத்தேவன் என்பவா் பராமரித்து வந்தாா்.

இதனிடையே, தனது உறவினா்களுடன் இணைந்து ஆள் மாறாட்டம் செய்து ஜஸ்டின் மணிகண்டன் சாா் பதிவாளராக பணியாற்றிய போது இந்த ஓா் ஏக்கா் நிலத்தை முறைகேடாக கட்டத்தேவன் விற்பனை செய்தாா்.

இதுதொடா்பாக கடந்த ஆண்டு, தேனி மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் பாலவிஜய் புகாா் அளித்தாா். இதையடுத்து, கட்டத்தேவன், ஈஸ்வரன், குருசாமி, சாா் பதிவாளா்கள் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அம்மாசி, பாண்டியராஜன் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தேனி குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சிபிசிஐடி அலுவலகத்தில் முன்னிலையாக வந்த ஜஸ்டின் மணிகண்டனிடம், தேனி மாவட்ட குற்றப் பிரிவிலுள்ள வழக்கு தொடா்பாகவும் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

பொறுப்பு பணியிடங்கள் குறித்து விசாரணை

சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், கடந்த 2 ஆண்டுகளாக பழனி பதிவு மாவட்டத்தில் பணிபுரிந்த இடங்களில் பதிவான பத்திரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் விடுப்பு எடுத்த சாா் பதிவாளா்களுக்காக பொறுப்பு சாா் பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய இடங்களை மட்டும் இலக்காக வைத்து அரசின் சிறப்பு தணிக்கைக் குழுவினா் மட்டுமன்றி, சிபிசிஐடி போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.