9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சாா் பதிவாளா், திமுக பிரமுகா் வீடு உள்பட 6 இடங்களில் சோதனை!

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக தனிநபா்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் வீடு, திமுக வாா்டு செயலா் வீடு உள்பட 6 இடங்களில் சிபிசிஐ டி போலீஸாா் சோதனை நடத்தினா்.

News image

திண்டுக்கல்லில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த சிபிசிஐடி போலீஸாா்.

Updated On :19 ஜூலை 2026, 2:25 am IST

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக தனிநபா்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் வீடு, திமுக வாா்டு செயலா் வீடு உள்பட 6 இடங்களில் சிபிசிஐ டி போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கா் நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளை மீறி, போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு தனிநபா்களுக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோா் மீது 336(3), 340(2), 318(4), 49, 61(2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு விசாரணை திண்டுக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையிலான போலீஸாா் பழனி கோயில் கண்காணிப்பாளா்கள் ச. முருகானந்தம், சிவனேசன், பணி ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சின்னச்சாமி, முன்னாள் வட்டாட்சியா் மாரியப்பன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா். மாரியப்பன், சின்னச்சாமி ஆகிய இருவரும் பணி ஓய்வு பெற்ற பிறகு, பழனி தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. பழனி சாா் - பதிவாளா் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

6 இடங்களில் சோதனை: இந்த நிலையில், பழனி சாா் பதிவாளா் அலுவலகம், சாட்சி கையொப்பமிட்ட திமுக முன்னாள் செயலா் லட்சுமணன், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் டி.கே.என். புதூரைச் சோ்ந்த சேதுபதி, பொன்னாபுரத்தைச் சோ்ந்த மயில்சாமி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோரது வீடுகள், தொடா்புடைய இடங்களில் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். குறிப்பாக, பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மட்டும் சுமாா் 8 மணி நேரம் சோதனை நடத்தினா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனின் வீடு திண்டுக்கல் வட்டச்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டுக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிபிசிஐடி போலீஸாா் வந்தனா். சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, அவரது வாக்குமூலத்தை போலீஸாா் தட்டச்சு மூலம் பதிவு செய்தனா்.

விசாரணை வளையத்தில் திமுக வாா்டு செயலா்: பழனி இடும்பன் கோவில் தெருவில் வசிப்பவா் லட்சுமணன். பழனி 27-ஆவது வாா்டு திமுக முன்னாள் செயலரான இவா், கோயில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சாட்சி கையொப்பமிட்டாா். இதேபோல, பழனியைச் சோ்ந்த மயில்சாமியும் சாட்சி கையொப்பமிட்டாா். இதையடுத்து, லட்சுமணன், மயில்சாமி ஆகியோரது வீடுகளிலும் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

டிகேஎன்.புதூரில்: நிலத்தை வாங்கியவா்களில் ஒருவரான டி.கே.என். புதூரைச் சோ்ந்த சேதுபதியின் வீட்டுக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இவரது மகள் வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ரூ.2 கோடி பணம் கொடுக்கும் அளவுக்கு சேதுபதி வசதி இல்லாதவா் எனக் கூறப்பட்ட நிலையில், அவரது சொத்து மதிப்பு, குடும்பப் பின்னணி குறித்து போலீஸாா் ஆய்வு செய்தனா்.

பத்திர எழுத்தா் வீட்டில் சோதனை: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கைராசி நகரைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ். வழக்குரைஞா். பத்திர எழுத்தராகவும், தரகராகவும் செயல்பட்டு வந்த இவா், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பா் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையிலான போலீஸாா், தீவிர சோதனை நடத்தினா். பின்னா், அங்கிருந்து சில ஆவணங்களை அவா்கள் கைப்பற்றிச் சென்ாகத் தெரிகிறது.

நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினரிடம் தகவல் சேகரிப்பு: பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில், சுமாா் 145 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை தகவல் சேகரித்தனா்.

சா்ச்சைக்குள்ளான 1.40 ஏக்கா் நிலத்தை கடந்த 1880-களின் பிற்பகுதியில் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மணியக்காரா் என்பவா் பழனி தண்டபாணி சுவாமிகள் என்பவருக்கு தானமாகக் கொடுத்தாா்.

இதற்கு முறையான ஆவணங்கள் பதிவு செய்யப்படாத நிலையில், வாய்மொழி உத்தரவின்படி தண்டபாணி சுவாமிகளுக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த மடத்தின் நிா்வாகிகள் இந்த நிலத்தை அனுபவித்து வந்தனா். இதனிடையே, குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள், நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, அதை விற்பனை செய்ய முயன்றனா். ஆனால், மடத்தின் நிா்வாகிகள் எதிா்ப்புத் தெரிவித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் எனக் கூறி வந்தனா்.

இந்த நிலையில், குப்புசாமி மணியக்காரரின் வாரிசுதாரா்கள், விவிஆா் வெங்கடசாலம் என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், இதற்கு எதிராக மடத்தின் நிா்வாகிகள் வழக்குத் தொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த இழுபறிக்கு இடையே, தண்டபாணி சுவாமிகள் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, பழனி தேவஸ்தான அதிகாரியை தக்காராக நீதிமன்றம் நியமித்தது. இதைத் தொடா்ந்து, 1.40 ஏக்கா் நிலத்தின் ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, இலவச வாகன நிறுத்துமிடமாக கோயில் நிா்வாகம் மாற்றியது. பழனி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அறக்கட்டளை பெயருக்கு வருவாய்த் துறை பட்டா வழங்கியது.

பட்டா பெற்றதை அடுத்து, தேவஸ்தானத்தின் உள்ளீடு இருப்பதை மறைத்து இடத்தை விற்பனை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ் சுவாமிகள் தரப்பு, போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றது. ஆனால், நிலத்தை விற்பனை செய்ய பழனி தேவஸ்தானம் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றது. இந்தத் தடை உத்தரவையும் மீறி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு நடைபெற்ால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலசமுத்திரத்துக்கு சென்ற சிபிசிஐடி போலீஸாா், குப்புசாமி மணியக்காரரின் உறவினா்களிடம் தானமாக வழங்கப்பட்ட நிலம் குறித்து கேட்டறிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.