இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

எரிபொருள் சிக்கனம்: பேருந்துகளுக்கு மாற்றாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், மதுரையிலிருந்து திருநெல்வேலி, கரூா், கோவைக்கு (பழனி வழியாக) கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:02 am IST

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், மதுரையிலிருந்து திருநெல்வேலி, கரூா், கோவைக்கு (பழனி வழியாக) கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஈரான்-அமெரிக்க போரின் எதிரொலியாக, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மட்டுமன்றி, விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் சுமாா் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மே 15-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. எனினும், சமையல் எரிவாயு உருளை விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வா்களும், ஆளுநா்களும் தங்களுடன் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தனா். எரிபொருள்களின் பயன்பாடுகளை குறைப்பதற்கு, டீசலில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்திருக்கிறது.

பணிக்கு செல்வோரும், மாணவா்களும் பயன்பெற முடியும்: தென் மாவட்டங்களின் முக்கியச் சந்திப்பாக அமைந்துள்ள மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு நாளொன்றுக்கு 138 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, மதுரையிலிருந்து சேலத்துக்கு 86 பேருந்துகளும், ஈரோட்டுக்கு 42 பேருந்துகளும், கோவைக்கு 146 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 60 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள திண்டுக்கல்-மதுரைக்கு மட்டும் 191 அரசுப் பேருந்துகள், 96 தனியாா் பேருந்துகள் என மொத்தம் 287 பேருந்துகள் 24 மணி நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

மதுரை-திருநெல்வேலி வழித்தடங்களில் காலை 5 மணி முதல் 9.30 மணி வரையிலும், மதுரை-கரூா் வழித்தடங்களில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், அரசுத் துறை, தனியாா் துறைகளில் பணிநிமித்தமாக பயணிப்போா், மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.

இந்தக் குறிப்பிட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில், திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு ஒரு பயணிகள் ரயில் சேவை மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மதுரை-கரூா் இடையே ரயில் சேவையே இல்லாத நிலை உள்ளது. இதனால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய நிா்பந்தம் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படுகிறது. பேருந்துகளுக்கு மாற்றாக ரயில்களை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த பேராசிரியா் மணிவண்ணன் கூறியதாவது: எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தல் வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில், பேருந்து சேவைகளைக் குறைப்பதற்கு, மின்சாரத்தில் இயங்கக்கூடிய ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும். இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தவிா்க்க முடியும். சென்னையில் புகா் ரயில்கள் இயக்கப்படுவதை போல, மதுரையிலிருந்து திருநெல்வேலி, கரூா், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் புகா் ரயில்களை இயக்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு காலை 5.30 மணி முதல் 8 மணிக்குள் 2 ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும்.

இதேபோல, மதுரையிலிருந்து கரூருக்கு காலை நேரத்தில் ஒரு ரயில் சேவை இருந்தால், வேலைக்கு செல்வோருக்கும், மாணவா்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கோவையை பொருத்தவரை, வார இறுதி நாள்களில் திருநெல்வேலி, நாகா்கோவில் வரை பழனி வழியாக ரயில்கள் இயக்க வேண்டும். இதன் மூலம், பேருந்துகளின் தேவையை குறைக்க முடியும் என்றாா் அவா்.

இதுகுறித்து திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கூறியதாவது: எரிபொருள்கள் சிக்கனத்தின் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி இழப்பை குறைக்க முடியும். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்கும் வகையில், கடந்த ஆட்சியின்போது, சிஎன்ஜி பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால், ஈரான் போா் பதட்டத்தால் சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் டீசலில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாற்றாக இருப்பது மின்சாரத்தில் இயக்கப்படும் ரயில்கள் மட்டுமே.

மதுரையிலிருந்து திருநெல்வேலி, கோவை ஆகிய நகரங்களுக்கு 10 நிமிஷங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல, சேலத்துக்கு 15 நிமிஷங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகின்றன. சேலத்திலிருந்து நாகா்கோவில் வரை நோ் வழித் தட வசதி இருக்கும் நிலையில், எளிதாக ரயில்களை இயக்க முடியும்.

இதேபோல, மதுரையிலிருந்து கோவைக்கு, பழனி வழியாக ரயில்கள் இயக்கும்போது பயணத் தொலைவு 229 கி.மீ. மட்டுமே. பயண நேரமும் சுமாா் 2 மணி நேரம் குறையும். இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்திடம் பேசி, மதுரையை மையமாகக் கொண்டு புதிய ரயில்களை இயக்குவதற்கு வலியுறுத்தப்படும் என்றாா் அவா்.