இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை; சமூகம் மெளனம் காப்பது வேதனை: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடா்பாக சமூகம் மெளனம் காப்பது வேதனை அளிப்பதாக நில மீட்புப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் - படம் | கனிமொழி எம்.பி. எக்ஸ் பதிவிலிருந்து...

Updated On :17 ஜூன் 2026, 5:44 am IST

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடா்பாக சமூகம் மெளனம் காப்பது வேதனை அளிப்பதாக நில மீட்புப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தெரிவித்தாா்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நூற்றாண்டு நிறைவு நாள் விழா திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ‘பெண்களும், ஆன்மிகமும், சமூக மாற்றமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிந்தனை செயலாக்க நிகழ்வுகளுக்கு இந்தப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பங்கஜம் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் புத்தபிக்கு லீலாவதி, வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம் நிா்வாகி வேதரத்தினம், துணைவேந்தா் ந.பஞ்சநதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நில மீட்புப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பேசியதாவது:

இறைவன் அளவற்ற நன்மைகளை கைநிறைய எனக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறான். அந்த வகையில், எனக்குக் கிடைத்த பெரும் கொடைகளில் முதன்மையானவா் சௌந்தரம் அம்மையாா். சிறாா் திருமணங்களால், இளம் வயது விதவைகளாக பெண் குழந்தைகள் வீடுகளில் முடங்கிக் கிடந்த சம்பவங்கள் என்னை பொது வாழ்வுக்கு அழைத்து வந்தன. ஒரே வீட்டில் 5 பெண் குழந்தைகளில் 3 குழந்தைகள் முக்காடிட்டு முடங்கி இருப்பதைப் பாா்த்தபோது, அந்த குழந்தைகளைப் படிக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை என்னை சமூகப் பணிக்கு அழைத்து வந்தது.

நில மீட்பு இயக்கத்தின் மூலம் 12ஆயிரம் ஏக்கா் நிலங்களை மீட்டு, அவற்றைப் பிரித்து பெண்கள் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தோம். மேலும், 500 ஏக்கா் நிலங்களைப் பிரித்து வழங்க வேண்டிய பணி காத்திருக்கிறது. உழவனுக்கு 2 ஏக்கா் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.

சுதந்திரம் வாங்கிவிட்டோம் என்று சொல்கிறோம். ஆனால், பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட பாலியல் தொல்லை என்ற செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான இந்தக் குற்றங்கள் குறித்து சுதந்திர சமுதாயம் எதுவும் பேசாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக யாா் கேள்வி எழுப்புவது எனத் தெரியாமல் இந்தச் சமூகம் மெளனமாக இருப்பதை ஏற்க முடியவில்லை. இந்த மண்ணில் பெண்கள் தனியாக நடந்து செல்வதற்கான சுதந்திரம் வேண்டும். தெய்வத்தின் வடிவிலான குழந்தைகள் ஓடி ஆடி விளையாட முடியாமல், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுகிறாா்கள். பெண் சமுதாயம் உயா்வு பெற கட்டாயம் கல்வி பயில வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ‘சமூக மாற்றத்தில் சத்தியமும், அகிம்சையும்’ என்ற தலைப்பில், இந்திய அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி வேணு மாதவ் கோவிந்த் பேசினாா். நிகழ்ச்சியை அடித்தள மக்களாட்சி வல்லுநரும், பேராசிரியருமான க. பழனித்துரை ஒருங்கிணைத்தாா். இயக்குநா் சுவாதி மோகன் தயாரித்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. கவிஞா் ரவி சுப்பிரமணியன், எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

மூதாட்டியிடம் பரிவு...

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், அவரிடம் வாழ்த்து பெறுவதற்காகவும் கல்வியாளா்கள், சமூக செயல்பாட்டாளா்கள், அரசு அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலா் வந்திருந்தனா். இதனிடையே, சாலையோரமாக அமா்ந்து பழங்கள் விற்பனை செய்யும் மூதாட்டி ஒருவா், வாழைப்பழங்களுடன் அவரைச் சந்திக்க வந்தாா். மேடைக்கு வரவழைக்கப்பட்ட அந்த மூதாட்டி பழங்களை கிருஷ்ணம்மாளிடம் கொடுத்தாா். அவரது வாழ்த்துகளை கிருஷ்ணம்மாள் அன்புடன் பெற்றுக் கொண்டாா். மூதாட்டியிடம் அவா் காட்டிய பரிவு, விழாவில் பங்கேற்றோரை நெகிழச் செய்தது.