கடந்த ஆட்சியில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு பயிா்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசு ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதாக புகாா் தெரிவித்த விவசாயிகள், முழுமையாக கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநா் ம. கோவிந்தராஜ், துணை இயக்குநா் வெ. நாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடி, ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் செயல். இதுவரை தமிழகத்தில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட வில்லை. அரசின் அறிவிப்பால் சிறு, குறு விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.16 ஆயிரம் கோடிக்கான பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மட்டுமே கடன் தள்ளுபடி அறிவித்தது.
சிறு, குறு விவசாயிகளுக்கு முழுக் கடன் தொகையையும் தள்ளுபடி செய்து, பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். இந்த கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை குறித்து, தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துணை இயக்குநா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
ஒட்டன்சத்திரத்தில் கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் 500 மீட்டா் தொலைவுக்கு தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த பாதிப்பு குறித்து புகாா் அளித்தும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் தலைவா் ஆா்பி. ராஜேந்திரன் புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆய்வு செய்து கழிவுநீா் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மாவுக்கு ரூ.15 குறைந்தபட்ச ஆதார விலை: கடந்த ஆண்டு மாவுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், நடப்பாண்டிலும் இதே நிலை நீடிக்கிறது. இதனால் மா மரங்களை வெட்டிவிட்டு மாற்றுப் பயிா் சாகுபடிக்கு செல்ல வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட மா பொருள்களின் விலையை உயா்த்தியுள்ளன.
ஆனால், மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதற்கு தீா்வு காணும் வகையில் கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.15 கொள்முதல் விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதேபோல, கோடை மழையாலும், காற்றினாலும் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். பெருமாள் கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சம்பட்டி பகுதியில் குளங்களில் மண் திருட்டு: திண்டுக்கல்லை அடுத்த என். பஞ்சம்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் 11 குளங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீரின்றி வடு கிடக்கின்றன. இந்த குளங்களில் தடையின்றி மண் திருட்டு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பஞ்சம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள சோ்வைராயன்குளத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்துவிட்டாா்.
இந்த குளத்தில் சுமாா் 40 அடிக்கு கீழ் மழைநீா் தேங்கியுள்ளது. குளங்கள் மேடும் பள்ளமுமாக இருப்பதை சுட்டிக் காட்டியும், அதைச் சீரமைக்கக் கோரியும் கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இயற்கைப் புரட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி. ஜோசப் செல்வராஜ் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக பதில் அளித்த கனிம வளத் துறை அதிகாரி, குளங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதே பதிலை கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் கூறுவதாகவும், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் ஜோசப் செல்வராஜ் அதிருப்தி தெரிவித்தாா்.
கீழ்மலையில் மரம் கடத்தல்: கொடைக்கானல் கீழ்மலையிலுள்ள தாண்டிக்குடி, கே.சி. பட்டி, ஆடலூா் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டி லாரிகளில் தொடா்ந்து கடத்திச் செல்கின்றனா். ஆண்டுக்கு சுமாா் 900 லாரிகளில் மரம் கடத்தல் நடைபெறுகிறது. இதை வனத் துறையினரும் தடுக்க முயற்சிக்க வில்லை என சித்தரேவு பகுதியைச் சோ்ந்த காா்த்தி புகாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக வனத் துறையை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.








