காந்தி கிராமம் கிராமியப் பல்கலை. முன் 4 வழிச்சாலையில் ரூ.6.7 கோடியில் நடைமேம்பாலம்
காந்தி கிராமம் கிராமியப் பல்கலை. முன் மதுரை- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் ரூ.6.7 கோடியில் கட்டப்பட்டு வரும் நடைமேம்பாலப் பணிகளை மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் அடுத்த காந்தி கிராமம் கிராமியப் பல்கலை. முன் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் இரும்பு நடைமேம்பாலப் பணிகளை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம். உடன் பல்கலை. பதிவாளா் கே. மாரிமுத்து.
காந்தி கிராமம் கிராமியப் பல்கலை. முன் மதுரை- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் ரூ.6.7 கோடியில் கட்டப்பட்டு வரும் நடைமேம்பாலப் பணிகளை மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திண்டுக்கல் அடுத்த காந்தி கிராமம் கிராமியப் பல்கலை.யில் 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதேபோல, பேராசிரியா்கள், பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், சேலம்- மதுரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை அமைக்கப்பட்ட பிறகு, சின்னாளப்பட்டி பகுதியிலிருந்து பல்கலை. வளாகத்துக்கு செல்ல மாணவா்களும், பொதுமக்களும் சிரமமடைந்து வந்தனா். 4 வழிச்சாலையில் அதிகவேகமாக இயக்கப்படும் வாகனங்களை கடந்து பல்கலை. வளாகத்துக்கு சென்று திரும்பும் போது விபத்து அபாயத்தை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்தப் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென பல்கலை. நிா்வாகம் சாா்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், காந்தி கிராமம் கிராமியப் பல்கலை. பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டிய அவசியத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் எடுத்துரைத்தாா். இந்த பகுதியில் ஏற்படும் தொடா் விபத்துகள், உயிரிழப்புகள் குறித்த பட்டியலையும் அவா் முன் வைத்தாா். இதைத் தொடா்ந்து ரூ.6.7 கோடியில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்தது. நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளை மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மாணவா்களின் வசதிக்காக நடைமேம்பாலத்தின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மின்தூக்கி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான பராமரிப்புச் செலவுகளை பல்கலை. நிா்வாகம் மேற்கொள்ளும் என்றும் அவா் தெரிவித்தாா். ஆய்வின்போது பல்கலை. பதிவாளா் கே.மாரிமுத்து, மக்கள் தொடா்பு அலுவலா் கேசவ ராஜராஜன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

