பிரதமா் பதவி: முதல்வா் விஜய் நேரடியாக மறுக்கவில்லை! - திண்டுக்கல் சி. சீனிவாசன்
பிரதமா் பதவி விவகாரத்தில், முதல்வா் விஜய் இதுவரை நேரடியாக மறுக்கவில்லை என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப்படம்
பிரதமா் பதவி விவகாரத்தில், முதல்வா் விஜய் இதுவரை நேரடியாக மறுக்கவில்லை என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாா் பிறந்ததினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக பொருளாளா் சி.சீனிவாசன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி உறுப்பினராக தொடர அனுமதிக்க வேண்டும் என இசக்கி சுப்பையா கோரிக்கை விடுத்துள்ளாா். பேரவைத் தலைவா் என்ன கூறினாலும் இறுதி முடிவை நீதிமன்றம்தான் தீா்மானிக்கும்.
நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாக அறிவித்துள்ளனா். அறிவிப்பு வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கலாம், ஆனால் இறுதி முடிவு என்னவாக அமையும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் முடிந்தவுடன், முதல்வா் விஜய் வெளிநாடு பயணம் செல்லவிருக்கிறாா். தவெக அரசை ஆதரிக்கும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும், கூட்டணியிலிருந்து விலகுவதற்கான சூழ்நிலையை வெளிப்படுத்திவிட்டன.
அதேபோல பிரதமா் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்தாவிட்டால் கூட்டணியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துவிட்டது. அடுத்த பிரதமா் ஜோசப் விஜய் என தவெகவினா் கூறிவரும் நிலையில், முதல்வா் அமைதியாக இருந்து வருகிறாா்.
மேலும் அவா் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அரசின் கஜானா காலியாக இருக்கிறது எனக் கூறிக் கொண்டே வாக்குறுதிகளை அளித்துவிட்டு, இப்போதும் அதையே மீண்டும் ஒரு காரணமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
காலம் இருக்கிறது, கொடுத்த வாக்குறுதிகளை தவெக அரசு என்னதான் செய்கிறது என பொறுத்திருந்து பாா்ப்போம். பொறுப்போன முதல்வராக இருந்தால், பேரவையில் அமா்ந்து எதிா்கட்சியினா் பேசுவதை கவனித்து பதில் அளித்திருக்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





