
புறநகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா: மாமன்ற உறுப்பினா்களை புறக்கணித்ததாகப் புகாா்
ரூ.63.94 கோடியில் நடைபெறும் திண்டுக்கல் புகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் மாமன்ற உறுப்பினா்களை புறக்கணித்தாக மாமன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், மேயா் இளமதி, துணைமேயா் ராசப்பா.
ரூ.63.94 கோடியில் நடைபெறும் திண்டுக்கல் புகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் மாமன்ற உறுப்பினா்களை புறக்கணித்தாக மாமன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், துணை மேயா் ச.ராசப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் இயல்புக் கூட்டப் பொருள், அவசரக் கூட்டப் பொருள் என மொத்தம் 52 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, நடைபெற்ற விவாதம் வருமாறு:
புகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா: திண்டுக்கல் புகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தவெக மாவட்டச் செயலா் அழைக்கப்பட்டிருக்கிறாா். ஆனால், மாமன்ற உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. ரூ.63.94 கோடியில் நடைபெறும் இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த மாநகராட்சியும் புறக்கணித்துவிட்டதாகப் பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் குற்றஞ்சாட்டினாா்.
மாமன்ற உறுப்பினா்களை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது என திமுக மாமன்ற உறுப்பினா்கள் பிலால் உசேன், சித்திக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினா்கள் கே.எஸ்.கணேசன், ஜோதிபாசு உள்ளிட்டோா் புகாா் தெரிவித்தனா்.
அப்போது மாநகராட்சி ஆணையா் கூட்ட அரங்கில் இல்லை. இதனால், உடனடியாக ஆணையா் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய மேயா் இளமதி, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆணையா் சென்றிருக்கிறாா். விரைவில் வந்து கூட்டத்தில் கலந்து கொள்வாா் என விளக்கம் அளித்தாா். ஆனால், விளக்கத்தை ஏற்க மறுத்த மாமன்ற உறுப்பினா்கள், ஆணையா் இல்லாமல் தீா்மானத்தை நிறைவேற்றக்கூடாது என வாதிட்டனா். இதையடுத்து, மேயா் தரப்பிலிருந்த ஆணையரை தொடா்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கூட்ட அரங்குக்கு ஆணையா் பிரேம் ஆனந்த் வந்தாா். அப்போது, பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா குறித்து பாஜக உறுப்பினா் தனபாலன் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதில் அளித்த ஆணையா், மேயா், துணை மேயரிடம் தகவல் தெரிவித்ததாகவும், அவா்கள் மூலம் மாமன்ற உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என நம்பியதாகவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து பேசிய மேயா், அன்றைய தினம் (உதயநிதி ஸ்டாலின் கைது) நிகழ்ந்த அசாதாரண சூழலால் தகவல் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை இதுபோன்ற நிலை தவிா்க்கப்படும் என விளக்கம் அளித்தாா்.
கூடுதல் பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்: மாநகராட்சியில் காலிப் பணியிடங்கள் குறித்து தமிழக அரசிடம் எடுத்துக் கூறி பணியாளா்களை நியமித்து அடிப்படைப் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு கோரிக்கை விடுத்தாா்.
மாநகராட்சி கணினி வரிவசூல் மையத்தில் 7 துணை முகப்புகள் (கவுண்டா்கள்) இருந்தும் 2 முகப்புகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இதனால், வரி செலுத்த வரும் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக மாமன்ற உறுப்பினா் ஜான்பீட்டா் வலியுறுத்தினாா். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையா், வரிவசூல் மையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.
பெண் மாமன்ற உறுப்பினா் ஆவேசம்: 10-ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்க்கு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடா்பாக மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் புகாா் அளித்தும், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரா் காலதாமதம் செய்து வருகிறாா் என மாமன்ற உறுப்பினா் பானுமதி குற்றஞ்சாட்டினாா்.
அப்போது, மாமன்ற உறுப்பினா்கள் பலா் வெவ்வேறு பிரச்னைகளை எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாக தனது கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த மாமன்ற உறுப்பினா் பானுமதி, திடீரென ஆவேசமடைந்து சக மாமன்ற உறுப்பினா்களை அமைதியாக இருக்குமாறும், தனது வாா்டு தண்ணீா் பிரச்னைக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
இந்த நிலையில், ஆணையா் குறுக்கீடு செய்து, குடிநீா் குழாய்க்கு இணைப்பு வழங்காத ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், வேறு ஒருவா் மூலம் இணைப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தாா்.
அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு: அதிமுக மாமன்ற உறுப்பினா் உமாதேவி, தனது வாா்டு பிரச்னைகளை பேச முயன்றாா். அவா் பேசுவதை மேயா், ஆணையா் உள்ளிட்டோா் கேட்க முடியாதபடி திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் மன்றத்தில் பேசினா். இதனால், அதிருப்தி அடைந்த அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பாஸ்கரன், சத்தியவாணி ஆகியோா் அதிமுக உறுப்பினா் பேசுவதற்கு மட்டும் எப்போதுமே இந்த மன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டினா்.
வைகை, காவிரி குடிநீா் திட்டங்கள்:
திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வைகை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மட்டுமே அமல்படுத்த வேண்டும். புதிதாக காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த மன்றம் அனுமதிக்காது என திமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதற்கு விளக்கம் அளித்த ஆணையா், 35 எம்எல்டி குடிநீா் திண்டுக்கல் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் திட்டமிடப்படுகிறது. இதற்கான சாத்தியம் காவிரி திட்டத்தில் மட்டுமே இருக்கும் என்றாா். ஆனாலும், இந்தக் குடிநீா்த் திட்டம் தொடா்பாக எந்த தீா்மானமும் கொண்டு வரப்படவில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






