செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: திண்டுக்கல்லில் 55,764 மாணவா்கள் பயன்

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 55,764 மாணவா்கள் கூடுதலாக பயன்பெறுவதோடு, மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 1.28 லட்சமாக அதிகரித்தது.

திண்டுக்கல் நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து மாணவா்களுடன் உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம். (வலது) திண்டுக்கல் புனித லூா்து அன்னை அரசு உதவிப் பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த்.

Published On :

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 55,764 மாணவா்கள் கூடுதலாக பயன்பெறுவதோடு, மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 1.28 லட்சமாக அதிகரித்தது.

தமிழகம் முழுவதும் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதன்படி, திண்டுக்கல் அடுத்த நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,398 அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 72,896 மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்று வந்தனா். தற்போது அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 484 பள்ளிகளில் பயிலும் 55,764 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,614 பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வரை வகுப்பு வரை பயிலும் 1,28,660 மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம. செல்வக்குமாா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் செள. கங்காதாரணி, நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநகராட்சியில் மேயா், ஆணையா் பங்கேற்பு:

இதேபோல, திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் மேயா் இளமதி கலந்து கொண்டு, மாணவா்களுக்கு உணவு பரிமாறினாா். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளா் சணல்குமாா், மாநகா் நல அலுவலா் முருகானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுரை சாலையிலுள்ள புனித லூா்து அன்னை அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். மாணவிகளுக்கு ஆணையா் பிரேம் ஆனந்த் காலை உணவு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் 43-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் விஜயா, மாநகராட்சி நிா்வாக அலுவலா் முத்துக்குமாா், உதவி வருவாய் அலுவலா் மணிகண்டன், சுகாதார அலுவலா் ஜான்பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

நிலக்கோட்டையில்...

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். அய்யனாா் பங்கேற்று, மாணவா்களுக்கு உணவு பரிமாறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.