ஆர்ஜித நிலங்களுக்கு மதிப்பு நிர்ணயம்,மாற்று சுற்றுச்சாலை அமைப்பது எப்போது? தாமதமாகும் மதுரை விமான நிலைய  விரிவாக்கம்

ஆர்ஜிதம் செய்த நிலங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்வது, மாற்று சுற்றுச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால் மதுரை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகி வருகிறது.
Updated on
2 min read

ஆர்ஜிதம் செய்த நிலங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்வது, மாற்று சுற்றுச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால் மதுரை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகி வருகிறது.
 மதுரை விமான நிலையம் 1957 இல் துவங்கப்பட்டாலும், 1960 இல் இருந்து முழு அளவில் செயல்பட்டு வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஏற்கெனவே இருமுறை நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, விமான நிலையத்தின் ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு நீட்டிப்பது உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளுக்காக 614 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு தமிழக அரசு 2009 இல் ஒப்புதல் வழங்கியது. இதன்படி மதுரை தெற்கு தாலுகாவுக்கு உள்பட்ட அயன்பாப்பாகுடி, பெருங்குடி, குசவன்குண்டு, பாப்பான் ஓடை, ராமன்குளம், கூடல்செங்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து மேற்படி நிலங்கள் ஆர்ஜிதம் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
 அதைத் தொடர்ந்து இந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் இழப்பீடு தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான குழு நிலங்களுக்கு உத்தேச மதிப்பு நிர்ணயம் செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இப்பணிகள் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
 நிலமதிப்பு தொடர்பாக, மாவட்ட அளவிலான குழு அனுப்பியுள்ள பரிந்துரையை,
 மாநில அளவிலான குழு பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு அரசு இழப்பீடு வழங்குவதற்கான தொகையை ஒதுக்கீடு செய்யும். மாநில அளவிலான குழு நில மதிப்பை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
 நிதி ஒதுக்கீடு பெறுவது ஒருபுறம் இருந்தாலும், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலஆர்ஜிதத்தில் சின்னஉடைப்பு கிராமத்தில் மதுரை மாநகராட்சியின் சுற்றுச்சாலையில் ஒரு கிமீ தூரம் இடம்பெற்றுள்ளது. இóந்த சுற்றுச்சாலையில் தான் விமான ஓடுதளம் அமையும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், இப் பகுதியை ஆர்ஜிதம் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.
 மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த சுற்றுச்சாலையைப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில், சுற்றுச்சாலையின் ஒருபகுதி ஆர்ஜிதம் செய்யப்படும் நிலையில், மாற்றுச் சுற்றுச்சாலை அமைக்க வேண்டியது அவசியம். இப்பணிக்கு அரசிடம் நிர்வாக அனுமதி பெற்று, மாற்று சாலைக்கு ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்களுக்கு இழப்பீடு, மாற்றுச் சாலை அமைப்பதற்கான நிதியை பெற்றுத்தருமாறு மாநகராட்சியிடம், மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளும் நிலுவையில் இருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். இவ்விரு காரணங்களால், நில ஆர்ஜிதப் பணிகள் முடிந்த நிலையிலும் விமான நிலைய விரிவாக்கம் அடுத்தகட்ட நிலைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறது.
 இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நில ஆர்ஜித மசோதாவுக்கான அறிவிப்பாணை எதிர்நோக்கப்படுகிறது. ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்களுக்கு இழப்பீடு தொடர்பாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நில ஆர்ஜித சட்டம் எந்த ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது என்பது அறிவிப்பாணையில் தான் தெரியவரும். இதன் காரணமாகவே, மதிப்பு நிர்ணயம் செய்வதில் தாமதம் இருந்து வருகிறது என்றனர்.
 தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு மதுரை விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அவசியமானது. இதன் மூலம், மேலும் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் வந்து செல்லும். ஆகவே, நில ஆர்ஜித பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வர்த்தகர்கள், தொழில் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
 எங்கு அமைகிறது?
 மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து கப்பலூர் வரையிலான மாநகராட்சியின் 27.2 கிமீ சுற்றுச்சாலை மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.
 இதில் சின்னஉடைப்பு கிராமத்தில் 1 கிமீ சாலை, விமான நிலைய விரிவாக்கத்துக்கான ஆர்ஜிதப் பகுதியில் வருகிறது.
 இதனால், இப்போதைய சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் பகுதியில் இருந்து கிழக்கே திரும்பி ராமன்குளம் வழியாகவோ அல்லது இப்போதைய சுற்றுச்சாலையில் மண்டேலா நகருக்கு முன்பாக மேற்குத் திசையில் பெருங்குடி வழியாகவோ மாற்றுச் சாலை அமைத்து பழைய சாலையுடன் இணைக்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றுச் சாலை 6.5 கிமீ தூரத்துக்கு அமைக்க வேண்டும். இதற்கென 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
 இப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அரசிடம் நிர்வாக அனுமதி பெற்று வருவாய்த் துறை மூலமாக நிலஆர்ஜிதம் செய்து மாற்றுச் சாலை அமைத்தால் மட்டுமே, விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஆர்ஜிதம் செய்த நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைப்பதில் எவ்வித பிரச்னையும் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com