
வழக்குரைஞரை இடைநீக்கம் தொடர்பான அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி உயர்நீதிமன்ற வழக்குரைஞர் எம்.திருநாவுக்கரசை அகில இந்திய பார் கவுன்சில் 2015 செப்டம்பரில் இடைநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருநாவுக்கரசு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு விபரம்:
இடைநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது போல், வழக்குரைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என மனுதாரர் தெரிவித்திருப்பது சரியானது.
அதே நேரத்தில் சாதாரண கடைநிலை ஊழியர்களை விட வழக்குரைஞர்களின் நடத்தை உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களை, வழக்குரைஞர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மட்டுமல்லாமல் நடத்தையுடனும் ஒப்பீடு செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் 2015 செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னையிலும், செப்டம்பர் 16 ஆம் தேதி மதுரையிலும் நடைபெற்ற போராட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றத்துக்கு எதிரான செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என உறுதி அளித்துள்ளார். மேலும், எந்த வழக்குரைஞர் சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை எனவும், பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் மனுதாரர் மீதான இடைநீக்க உத்தரவை பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும். அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வதில் நீதிமன்றம் தலையிடாது. இந்த உத்தரவு மனுதாரருக்கு மட்டுமே பொருந்தும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





