மதுரையில் திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா இலவச சட்ட உதவி மையத்தின் சார்பில், திருநங்கை பாரதி கண்ணம்மா தலைமையில், திருநங்கைகளுடன் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த சோனியா(27) என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பது:
மதுரையில் அழகு நிலையம் நடத்தி வருகிறேன். அழகு நிலையத்துக்கு வந்து செல்லும்போது, மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த வினோத் (28) என்பவர் அறிமுகமானார். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னுடன் பழகி வந்தார். இது வினோத்தின் குடும்பத்தினருக்கும் தெரியும். வினோத்தின் சகோதரர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வினோத் என்னிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதையடுத்து, என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால், அவரது குடும்பத்தினர் என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகக் கூறினார். நான் தொடர்ந்து வற்புறுத்தியபோது, அவரது குடும்பத்தினர் என்னைச் சந்தித்து வினோத்தை திருமணம் செய்ய வற்புறுத்தினால், என்னையும் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
எனவே, திருமண ஆசை காட்டி என்னை ஏமாற்றிய வினோத் மீதும், கொலை மிரட்டல் விடுக்கும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இப் புகாரை பெற்றுக்கொண்ட சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன், அதன் மீது விசாரணை நடத்த அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.