ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அரசாங்க வேலைதான்... ஆனால் சம்பளம் ரூ. 40 தான்

மதுரை அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவமனை

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:38 am

DIN

மதுரை அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவமனை நிர்வாகம் அமல்படுத்தாததால் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த தினக்கூலித் தொழிலாளர்கள் தங்களைப் பணியில் இருந்து விலகி தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியுமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியது. இதை ஏற்க மறுக்கும் தொழிலாளர்கள் பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்ததோடு பணிநீக்கம் செய்யவும் முயற்சித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தினக்கூலிப் பணியாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத்தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து தினக்கூலி பணியாளர்கள் பணியில் சேரும்போது  அவர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி ரூ.40 ஊதியத்தை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 9 பேர் பணியைவிட்டு விலகிச்சென்று விட்டனர். இதர 43 தினக்கூலி பணியாளர்களும் ரூ.40 ஊதியத்தில் பணியைத் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தினக்கூலிப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2016 டிசம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பல ஆண்டுகளாக தினக்கூலியாகப் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில்கொண்டு அவர்களை பணிநிரந்தரம் செய்து அதற்குரிய ஊதியத்தை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கி ஓராண்டுக்கு மேலாகியும் 43 ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இதுதொடர்பாக தினக்கூலிப் பணியாளர்கள் கூறியது: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ. 40 தினக்கூலியில் வாழ்க்கை நடத்தி வருகிறோம். இதில் ஒரு நாள் சாப்பாட்டுச்செலவுக்குகூட போதாத நிலையில் உள்ளோம். ஆனால் 15 ஆண்டுகள் வேலை பார்த்த உரிமையை விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில்  கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். உயர்நீதிமன்றம் உத்தரவை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியபோது,  ஊழியர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டுள்ளதாக கடந்த 6 மாதங்களாகத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உள்பட பல்வேறு துறைகளுக்கு மனு அனுப்பியும் பலனில்லை. தற்போது கூட மருத்துவமனை பெண் செவிலியர் உதவியாளர்கள் 10 பேர் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் இதே ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனை நிதியில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. புதிதாக பணியில் சேருபவர்களுக்கு மருத்துவமனை நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்படும் போது, 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் எங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது என்றனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது:  43 தினக்கூலி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவக்கல்வி இயக்குநரகத்தில் இருந்து நிதித்துறை  ஒப்புதலுக்கு சென்றுள்ளது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.