அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்: பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார்
சித்திரைத் திருவிழாவில், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


சித்திரைத் திருவிழாவில், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தில், மதுரை மற்றும் தென் மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வர்.
எனவே பாதுகாப்புப் பணிக்காக, மதுரை மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், துணை ஆணையர்கள் சசிமோகன், அருண்கோபாலன் உள்பட 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.
பக்தர்களின் உதவிக்காக ஆங்காங்கே காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றின் இரு கரைகள் மற்றும் ஆற்றை ஒட்டிய பகுதிகளைக் கண்காணிக்கவும் பறக்கும் கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைப் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க, குற்றப் பிரிவு போலீஸாரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களான தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், மதிச்சியம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா பொருத்தப்பட்ட நடமாடும் கண்காணிப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், காவல் கோபுரங்களில் இருந்து கூட்டத்தைக் கண்காணிக்கும் போலீஸார், சந்தேகத்துக்குரியவர்கள் குறித்து அப்பகுதியிலுள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பர்.
அழகர்கோவிலில் இருந்து வரும் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டது. மேலும், இப்பகுதியில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் இடையூறின்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேநேரம், அழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை முதல் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், மதுரை ஊரகப் பகுதிகளான வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...