கள்ளிக்குடியை அடுத்த பேய்க்குளம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கிராம மக்கள் தத்தெடுத்து தனியார் பள்ளிக்கு இணையான பள்ளியாக அதை தரம் உயர்த்தி வருகின்றனர்.
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது பேய்க்குளம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 188 மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் 8 பேர் பணியில் உள்ளனர். இப்பள்ளி பொதுமக்களின் பங்களிப்போடு மிகவும் சுத்தமாக, சுகாதாரமான பள்ளியாக திகழ்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்க கிராம மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க வந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, கரும்பலகை, மின்விசிறி என பல்வேறு பொருள்களையும் மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு வந்து கொடுத்தனர்.
இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன்மூலம் பள்ளியைப் பற்றி அறிந்த பலர் தாமாக உதவ முன்வந்துள்ளனர்.
இதே ஊரைச் சேர்ந்த பெங்களுரில் வசிக்கும் பொறியாளர் ஜனார்த்தனன் ரூ.1 லட்சம் செலவில் பள்ளி கட்டடத்தினை மராமத்து செய்து கொடுத்தார்.
இதேபோல பொதுமக்களின் உதவியோடு பள்ளி வளாகத்தில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வசதிக்காக ரூ.35 ஆயிரம் மதிப்பில் தொலைக்காட்சிப் பெட்டி, கணினி அறைக்கு 50 நாற்காலிகள் வாங்கி கொடுத்துள்ளனர்.
இப்பள்ளியின் 600 மீட்டர் நீள சுற்றுச்சுவரை அப்பகுதியின் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ரூ.30 ஆயிரம் செலவில் வர்ணம் பூசி, அதில் பாரதியார், பாரதிதாசன், அப்துல் கலாம் உள்ளிட்டோரின் கவிதைகள், பொன்மொழிகள் ஆகியவற்றை வரையச் செய்துள்ளார். மேலும் வளாகம் சுத்தமானதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தாத பள்ளியாகவும் உள்ளது. பொதுமக்கள் தத்தெடுத்ததன்மூலம் இப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் உள்ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் கூறியது: இப்பகுதியினர் தாங்களாகவே முன்வந்து உதவுகின்றனர். அதனால் பள்ளி சுத்தமானதாகவும், சுகாதாரமாகவும் உள்ளது என்றார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியது: பள்ளி சுவரைச் சுற்றிலும் அறிஞர்களின் பொன்மொழிகள், கவிதைகள் இடம்பெற செய்து வருகிறோம். மேலும் சுவரில் குழந்தைகளுக்குத் தேவையான கற்றல் செயல்பாடுகள் குறித்த படங்கள் மற்றும் வாக்கியங்கள் வரைய திட்டமிட்டுள்ளோம்.
சுமார் 600 மீட்டர் சுற்றளவுள்ள இந்த சுவரில் "சுவர் அகராதி' என்பது போல சுமார் 2 ஆயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் அர்த்தம் மற்றும் வாக்கியங்களை எழுத உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









