விருதுநகர் மாவட்டம் குண்டாறு படுகையில் வீரசோழன், ஆனைக்குளம், சேதுபுரம், சொக்கம்பட்டி பகுதிகளில் சவுடு மண் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த பிச்சை தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சுழி தாலுகா குண்டாறு படுகையில் உள்ள வீரசோழன், ஆனைக்குளம், சேதுபுரம், சொக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி பெற்று முறைகேடாக ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் சவுடு மண் அள்ள அனுமதியை பெற்றுக் கொண்டு இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குண்டாறு பகுதியில் 25 அடி வரை சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகின்றனர். சவுடு மண் என அனுமதி பெற்று ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்வதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் விளை நிலங்கள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் அதிக ஆழமாக மணல் அள்ளுவதால் நிலத்தடிநீர் பாதிப்புக்குள்ளாகி இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் போலி ரசீதுகளை தயாரித்து மணல் விற்பனை செய்து வருகின்றனர். எனவே குண்டாறு பகுதியில் உள்ள சவுடு மண் குவாரி உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், குண்டாறு படுகையில் உள்ள வீரசோழன், ஆனைக்குளம், சேதுபுரம், சொக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் இயங்கும் சவுடு மண் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.