மதுரைக் கோட்டத்தின் நடப்பாண்டு வருவாய் கடந்தாண்டை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளர் நீனு இட்டியரா கூறினார்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ரயில்வே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது: தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் நடப்பாண்டில் ரூ.262 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை மதுரைக் கோட்டத்தில் 1.78 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்தாண்டை விட 25 லட்சம் பேர் அதிகம் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பண்டிகை மற்றும் முக்கியத் திருவிழாக்களின்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க 334 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 80 முதல் 110 சதவீதம் வரையிலான பயணிகள் பயணம் செய்துள்ளனர். திருநெல்வேலி-காந்திதாம், தாம்பரம்-திருநெல்வேலி அந்தயோதயா ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
51 ஆள் இல்லாத ரயில் சாலை சந்திப்புகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. 24 விரைவு ரயில்களிலும், 2 பயணிகள் ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் தூய்மையைக் கடைபிடிக்கும் பட்டியலில் 61 ஆவது இடத்திலிருந்து 38 ஆவது இடத்துக்கு மதுரைக் கோட்டம் முன்னேறியுள்ளது. நடப்பாண்டில் மதுரையில் கூடுதலாக இரண்டு மின்தூக்கிகளும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மூன்று மின்தூக்கிகளும் நிறுவப்பட உள்ளன.
2017-18 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 758 ரயில் பெட்டிகளில் 16 ஆயிரத்து 776 பயோ டாய்லெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாதத்துக்குள் மதுரைக் கோட்டத்தில் இயங்கும் அனைத்து ரயில்களின் பெட்டிகளிலும் பயோ டாய்லெட் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முதன்முறையாக சிறப்பாக பணியாற்றிய வீரணன், செல்லத்துரை, ஆனந்த், சைமன் சுந்தர், தங்கராஜ், நாகரத்தினம், சகாதேவன் உள்ளிட்ட 7 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதர் பயஸ் என்பவர் உள்பட 8 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கி கோட்ட மேலாளர் நீனு இட்டியரா கௌரவித்தார்.
முன்னதாக, வைகை ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே வைகை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வைகை ரயிலின் சிறப்புகளை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.