"தமிழ் வளர்ச்சித் திட்டங்களுக்கு அறிஞர்கள் ஆலோசனை அவசியம்'

அரசின் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை அறிஞர்கள் வழங்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ரா.வெங்கடேசன் கூறினார்.
Updated on
1 min read

அரசின் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை அறிஞர்கள் வழங்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ரா.வெங்கடேசன் கூறினார்.
 மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் எழுத்தாளர்கள் ஈரோடு எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தின் மெய்ப்பொருள் கண்டேன், சென்னை பேராசிரியர்கள் ஸ்ரீ லதாவின் சங்கப் பெண்பாற் புலவர்களின் உளவியல், சி.முத்துமாலையின் கம்பராமாயணத்தில் கட்டமைப்பு, விஜயராணி செல்லப்பாவின் அவசர உலகமா? அவரவர் உலகமா?, ஆண்டன் பெனியின் மகளதிகாரம், மதுரை கவிஞர் க.கலையரசனின் இந்திய-தமிழ் சித்தர் மருத்துவத்தில் சர்க்கரை, டெங்கு நுண்கிருமி தீர்வுக்கான களம் ஆகிய நூல்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
 நூல்களை வெளியிட்டு செய்தித்துறை செயலர் ரா.வெங்கடேசன் பேசியது:
 தமிழ் எழுத்தாளர்கள் நூலை அரசு சார்பில் வெளியிடும் நூல் அரங்கேற்ற நிகழ்ச்சியை உலகத் தமிழ்ச்சங்கம் கடந்த ஆண்டு முதலே (2017) செயல்படுத்தி வருகிறது. மதுரையில் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்தே இது போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
 தமிழ் வளர்ச்சிக்கு மட்டும் கடந்த ஆண்டில் 25 அரசாணைகள் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட பல தமிழ் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு தமிழ் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருப்பதால், மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை ஆலோசனைகளாக அரசுக்கு தமிழ் அறிஞர்கள் வழங்க முன்வர வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசுகையில், இளந்தலைமுறையினர் கலாசாரப் பண்பாட்டை அறிய தமிழின் சங்ககால நூல்கள் அவர்களுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்றார்.
 மதுரை உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் கா.மு.சேகர் தொடக்கவுரையில், சங்க காலத்தில் சங்கப்பலகையில் நூல்கள் அரங்கேற்றி விவாதித்தது போல தற்போது உலகத் தமிழ்ச்சங்கத்திலும் நூல்கள் அரங்கேற்றம் நடந்து வருகிறது என்றார்.
 நூலாசிரியர்கள் சார்பில் ஈரோடு எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பேசுகையில், உலகத்தமிழ்ச் சங்கம் அரங்கேற்றும் நூல்கள் அனைத்தும் அனைத்து அரசு நூலகங்களிலும் இடம் பெறும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும். எழுத்தாளர், தமிழறிஞர்களுக்கு உலகத் தமிழ்ச்சங்கம் விருது வழங்கி பாராட்ட வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் ஆ.ஜெயரத்னம் வரவேற்றார். சங்க ஆய்வுவளமையர் ஜ.ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com