மதுரையை அடுத்த கீழக்குயில்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.12.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் பேசியது: மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அத்துறை அலுவலர்கள் மக்களுக்குத் தெரிவிப்பதால் ஒரே இடத்தில் அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது.
அலைச்சல் ஏதுமின்றி அவரவர் கிராமத்திலேயே அரசுத் திட்டங்களைப் பெற வழிவகை செய்யப்படுகிறது. இதுபோன்ற முகாம்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில் வருவாய், வேளாண்மை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தா, மேற்கு வட்டாட்சியர் பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.