சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ சொற்பொழிவில் உலக பொதுப்பார்வையுடன் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியது உலக அளவில் பாரதத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நிகழ்ந்து 125 ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் குணசேகரன், "சிகாகோவில் சுவாமி விவேகானந்தர்' எனும் தலைப்பில் பேசியதாவது:
சர்வ சமய மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பே அமெரிக்கா வந்துவிட்டதை, சிகாகோ சென்ற பிறகே சுவாமி விவேகானந்தர் அறிந்துகொண்டார். அதனால், அவர் பாஸ்டன் நகர் சென்றார். அங்கு பேராசிரியர் ரைட் என்பவரைச் சந்தித்தார். அவர்தான் சுவாமிக்கு மாநாட்டில் பங்கேற்கும் அறிமுக கடிதம் வழங்கினார்.
மாநாட்டின் மேடையில் பேச்சாளர்கள் மத்தியில் 31 ஆவது ஆளாக சுவாமி அமரவைக்கப்பட்டார். அவரை தொடக்க நாளில் காலையில் பேச அழைத்தபோதும், மாலையில் பேசுவதாக கூறினார். பேச எழுந்த சுவாமி அங்கிருந்தோரைப் பார்த்து சகோதர, சகோதரிகளே என அழைத்து அனைவரையும் எழுந்து கைதட்டி பாராட்ட வைத்தார். மேலும், யார் அபயம் தேடி வந்தாலும் இரு கரம் கூப்பி வரவேற்று அடைக்கலம் தரும் மாண்புமிக்க மண்ணிலிருந்து வந்து பேசுகிறேன் என்று பாரதத்தின் மனிதநேயத்தை உலகுக்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். அதன்பின் அவர் 6 சொற்பொழிவுகளை அங்கே நிகழ்த்தினார். அவரது பேச்சில் உலகப் பொதுப்பார்வையும், மனித நேயமும் வெளிப்பட்டது. ஆனால், மற்றவர்கள் பேச்சில் தங்களது மதத்தையே முன்னிலைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் சுவாமி விவேகானந்தர் மதம் கடந்த மனிதநேய ஆன்மிகவாதியாக போற்றப்படுகிறார் என்றார்.
நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நூல் இலவசமாக வழங்கப்பட்டது. சுவாமி தத்பிரபானந்தர் வரவேற்றார். இதில் பேராசிரியை சப்ராபேகம், டி.ஏ.ஜோசப் அய்யங்கார் ஆகியோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




